சசி முதல்வர் பதவி ஏற்க ராசியான தேதிகள் ரெடி.. தயாராகி வருகிறது மன்னார்குடிப் படை

அதிமுக பொதுச் செயலாளராக அண்மையில் பதவி ஏற்ற சசிகலா, அடுத்ததாக தமிழக முதல்வராகவும் பதவி ஏற்க தயாராகி வருகிறார். பதவி ஏற்பதற்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியை எந்த வித கஷ்டமும் இல்லாமல் பெற்றுவிட்டார் சசிகலா. இதே போன்று முதல்வர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதற்கான வேலைகளை மன்னார்குடி சொந்தபந்தங்கள் படுஜோராக செய்து வருகிறது.

சசிகலா பதவி ஏற்க தோதான ராசியான நாட்களை ஜோதிடர்களை சந்தித்து மன்னார்குடி வகையறாக்கள் வாங்கியுள்ளன. அதன்படி வரும் 14 மற்றும் 16ம் தேதி நல்ல நாட்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

என்றாலும், முன்னர் வினை காத்திருக்கிறது சசிகலாவிற்கு. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து மரணம் ஜெயலலிதாவை காப்பாற்றிவிட்டது என்றாலும் உயிரோடு இருக்கும் சசிகலா பதில் சொல்லியே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறார். அதற்கான தீர்ப்பு விரைவில் வர உள்ளதால், முதல்வர் கனவை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Posted in: செய்திகள்