மன்னார்குடி பேரத்துக்கு பணியாத தீபா… போயஸ் கார்டனில் இருந்து தொடரும் மிரட்டல்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. தீபாவிடம் பேரம் பேசியும் அவர் பணிந்து போகாததால் மிரட்டலும் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை அப்படியே விழுங்கிவிட்டார் சசிகலா. அத்துடன் தன்னை ஒரு டூப்ளிகேட் ஜெயலலிதாவாக உருமாற்றி வருகிறார் சசிகலா.

சாணி வீச்சு
ஆனால் சாதாரண அதிமுக தொண்டர்கள் எவருமே சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலராக ஏற்க மறுத்து வருகிறார்கள். சசிகலாவின் போஸ்டர் எங்கே ஒட்டப்பட்டாலும் அது கிழிக்கப்படுகிறது; சாணி வீசப்படும் நிலைமைதான் இருக்கிறது.

தீபாவுக்கு ஆதரவு
அதேநேரத்தில் அதிமுக தொண்டர்களின் ஒரே சாய்ஸாக தீபாதான் இருந்து வருகிறார். நாள்தோறும் தீபா வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஒன்று திரண்டு, அதிமுகவுக்கு தலைமை ஏற்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். சசிகலா மீது கடும் கோபத்திலும் அதிமுக தொண்டர்கள் இருந்து வருகின்றனர்.

பேரம் பேசிய போயஸ் கார்டன்
இதையடுத்து தீபாவின் சகோதரர் தீபக் மூலமாக மன்னார்குடி கோஷ்டி பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தது. ஆனால் தீபாவோ, சற்றும் எதிர்பாராத அதிமுக தொண்டர்கள் ஆதரவால் மலைத்து போய் நிற்பதுடன் பேரத்துக்கும் பணியவில்லை.

மிரட்டல்
இதில் கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறது மன்னார்குடி கோஷ்டி. தற்போது தீபாவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தும் வருகிறதாம் மன்னார்குடி கோஷ்டி. ஆனாலும் அசராத தீபா, அதிமுக தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்துக்கும் ரெடியாகி கொண்டிருக்கிறாராம்.

Posted in: செய்திகள்