தனியார் நிகழ்ச்சியில் கேலிக்கூத்து.. சசிகலா முன்னிலையில் ஓ.பி.எஸ் புறக்கணிப்பு: வைரல் வீடியோ

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைவிட அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு பொது இடங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மீடியா குழுமம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் ஒரே மேடையில் ஒன்றாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டார் ஹோட்டலுக்கு பன்னீர் செல்வம் முதலிலேயே வந்துவிட்டார். பிறகுதான் சசிகலா வந்தார். சசிகலாவை வரவேற்க மீடியா குழும நிர்வாகிகள் ஹோட்டல் வாசலில் குழுமினர். அதோடு பன்னீரும் நின்று கொண்டிருந்தார்.

சசிகலா காரில் வந்து இறங்கியதும் (ஜெயலலிதா பயன்படுத்திய கார்), மீடியா நிர்வாகிகளும், பிறரும், அவரை சூழ்ந்து கொண்டு வரவேற்பு அளிப்பதில் பிசியாக இருந்தனர்.

அப்போது ஓ.பி.எஸ் இக்கூட்டத்தின் பக்கவாட்டில் சசிகலாவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். இதன்பிறகு சசிகலாவை ஹோட்டலுக்குள் அழைத்து செல்லும்போது கூட ஓ.பி.எஸ் கண்டுகொள்ளப்படவில்லை. முதல்வரை சுற்றிலும் பாதுகாப்பு அதிகாரிகள் நின்றபடி சூழ்ந்து அழைத்துச் செல்வர். ஆனால் ஓ.பி.எஸ்சோ சசிகலா பின்னால் போன கூட்டத்தோடு கூட்டமாக சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் புறக்கணிக்கப்படுவது ஒட்டுமொத்த மாநில மக்களும் புறக்கணிக்கப்படுவதற்கு சமமான நடவடிக்கை. இதை ஓ.பி.எஸ் விரும்பியே ஏற்றுக்கொள்வது போன்ற செயல்பாடு அதைவிட கொடுமை. இந்த நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் இழுக்காகவே பார்க்கப்படுகிறது.

Posted in: செய்திகள்