“எம்.ஜி.ஆர். 100”.. சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய ஓ.பி.எஸ்.சுக்கு கடிதம்

சென்னை: எந்த வித வழக்கோ, வழக்கு விசாரணையோ இல்லாமல் நீண்ட காலமாக சிறையில் முஸ்லிம்கள் தண்டனை பெற்று வருகின்றனர். இவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட உள்ளது. இதனையொட்டி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் தண்டனை பெற்று நீண்ட காலமாக தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. தமிழக அரசு அத்தகைய நல்லெண்ண அடிப்படையிலான முடிவை எடுத்தால் அதனை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசு சார்பில் அத்தகைய அறிவிப்பை வெளியிடும் போது பல்லாண்டு காலமாக தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த சிறைக் கைதிகளையும், வழக்கோ விசாரணையோ இல்லாமல் பல்லாண்டு காலமாக தமிழக சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் முஸ்லீம்களின் வழக்குகளை மறுபரிசீலனை செய்து அவர்களையும் சிறைகளில் இருந்து விடுதலை செய்யுமாறும், அவர்களது பிரிவால் மிகவும் துன்ப துயரத்தில் வாழும் இஸ்லாமியக் குடும்பங்களின் துயரத்தைக் களைய நடவடிக்கை எடுக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in: செய்திகள்