செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம் எல்லாம் யாரிடம் பலிக்காது தெரியுமா?

பில்லி, ஏவல், சூனியம், வசியம் என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழி மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று அகத்தியர் கூறியுள்ளார்

இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன.

இந்து மரபியலில் மாந்திரிகம் பற்றிய பழைய நூல்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. அதர்வண வேதத்திலும் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.இந்த வகையில் ‘உத்திர காலாமிர்தம்’ என்ற நூல் முக்கியமானதாக கருதப் படுகிறது.

மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன. இவை பற்றிய சுருக்கமான தெளிவுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பில்லி

மாந்திரிகம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவதே இந்த வார்த்தைதான். ஒரு மனிதனின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து குழப்பி அவரது எண்ணம், செயல், சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது.

சூனியம்

சூனியம் என்றால் ஒன்றுமில்லாத ஒரு நிலை .அதாவது ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரிகமுறை. இவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் ஆடை, அணிகலன்கள், முடி, காலடி மண் போன்றவைகளைக் கொண்டு செய்யப் படுகிறது.

வசியம்

தான் விரும்பிய அல்லது விரும்பாத ஒருவரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுதான் வசியம். இது ராஜவசியம், லோகவசியம், சர்வவசியம், மிருகவசியம், ஆண்பெண் வசியம் என தேவைகளின் அடிப்படையில் செய்யப் படுகிறது. பெரும்பாலும் இந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் செய்கின்றனர். பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் நடப்பதும், ஏமாறுவதும் இந்த வகையினரே!

ஏவல்

ஏவல் என்பது ஒருவரை, அவன் விரும்பாத அல்லது உடன்படாத காரியம் ஒன்றினை செய்திடும் படி ஏவுதல் ஆகும். பூசையில் வைத்து மந்திரசக்தியூட்டப் பட்ட உணவுப் பொருட்களை உண்ணக் கொடுப்பதன் மூலமாக ஒருவரை ஏவலில் சிக்க வைக்க முடியுமாம். இந்த வகையில் நன்மையும் செய்யலாம், தீமையும் செய்ய முடியும்.

செய்வினை

தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று.

வைப்பு

இதுவும் செய்வினையைப் போன்றதே. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும். பூசிக்கப்பட்ட யந்திர தகடுகள், மருந்துகள் போன்றவை இவ்வாறு வைக்கப்படுகின்றன. இவை தவிர இறந்து போனவர்களின் ஆவிகளைக் கொண்டு செய்யப்படும் மாந்திரிக முறைகளும் இருக்கின்றன.

மனோவசியம்

உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர். இண்டெர்நெட் வழியே எப்படி மனோவசியம் செய்ய முடியும் என்ற சந்தேகம் ஏற்படலாம்.இது சாத்தியமே என்று சொல்லும் ஹுயுஜ்ஸ் ஹெட்ஃபோன் மூலம் தன்னிடம் காதுகளை கொடுத்தால் போதும் வசியம் செய்துவிடுவேன் என்கிறார்.

மனநலம் குன்றுதல்

மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே – படித்தவர் உட்பட – பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது (‘பராசக்தி’ வசனம்!).

மாயம் மந்திரம்

மாந்திரீகம் மற்றும் மனோவசியம் மற்றும் மனநலம் குன்றுதல் பற்றி மேலே கூறப்பட்டவைகளை படித்ததில் இருந்து நமக்கு கீழ்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன:

•மாந்திரீகத்தின் முக்கிய செயல்பாடு ஒருவரின் மனதை சிதைத்து அதன் மூலம் அவரை செயலற்றவராகவோ அல்லது பிறர் பேச்சை கேட்பவராகவோ மாற்றுவது.

•உணவில் நஞ்சுத்தன்மையை செலுத்தி அதன் மூலம் உடல் நிலையை பாதிக்க செய்வது.

•ஒருவரின் பார்வையிலோ பயம் தரும் விஷயங்களை வைப்பது அல்லது காதுபட பயம் தரும் விஷயங்களை பேசுவது அதனால் அதிக பயம் கொள்ள செய்வது.

ஜோதிடமும் மனோவசியமும்:

•மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதை கட்டுபடுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. ‘சந்த்ரமா மனஸோ ஜாத:’ என்கிறது புருஷ சூக்தம்.சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும்.

•பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.

பாதிப்படையும் கிரக நிலை:

•லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.

•சந்திரன் லக்னத்திற்க்கு 4/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது.

•சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது

•சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது.

•ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது.

•தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது.

•சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது.

மனபாதிப்பு எப்போது ஏற்படும்?

•சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள்

•ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள்

•சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள்

•சந்திரன் கேது புத்தி காலங்கள்.

•சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள்.

யாரிடம் அபிசாரமுறைகள் பயனளிக்காது?

•வேதத்தை ஓதும் அந்தனர்களிடம் அபிசாரம் பயனளிக்காது. அதாவது வேதியர்கள் அனைவரும் குருவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனவே குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதால் அவர்களிடம் அபிசார வித்தைகள் பயனளிக்காது.

•தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள்.

•காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.

•ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும்;

•கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

•லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள்.

•கிரஹன காலங்களில் பிறந்தவர்கள்.

•உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள்.

•யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது

ஜோதிட பரிகாரங்கள்

•குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு.

•ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு.

•மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம்,திருப்பதி வழிபாடுகள்.

•சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள்.

•மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.

•சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை அபிசாரங்கள் நெருங்குவதில்லை.

மனதை ஒருநிலைபடுத்துங்கள்

மொத்தத்தில் எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்துவதே மனோவசியம் மற்றும் அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழியாகும்.

Posted in: செய்திகள்