73 வயது தம்பதிக்கு பதிவுத் திருமணம்

73 வயதுத் தம்பதியருக்குப் பிள்ளைகள் சேர்ந்து பதிவுத் திருமணம் செய்து வைத்தனர். இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாட்சிக் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்வு நேற்றுமுன்தினம் பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான அரச தலைவர் மக்கள் சேவைத் திட்டத்தின் (நிலமெஹெவர) கீழ் நடமாடும் சேவை நடைபெற்றது. அதிலேயே இந்தத் தம்பதிகளுக்குக் காலம் கடந்த பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது.

சோரன்பற்றைச் சேர்ந்த 73 வயது தம்பதியினருக்கும் பளை கரந்தாயைச் சேர்ந்த 47 வயது குலசேகரம் இராசகுலசிங்கம் தம்பதியினருக்கும், அமைச்சர் வஜிர அபேவர்த்தன முன்னிலையில் திருமணப் பதிவு நடத்தப்பட்டது.

சாட்சிக் கையொப்பத்தை நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இட்டார்.

பிரதேச செயலர் திருமதி ஜெ.பரமோதயன் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையை கொழும்பு உள்நாட்டலு வல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆரம்பித்தார்.

நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், புத்தளம் மாவட்ட செயலர், அமைச்சின் செயலாளர்கள், வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

நடமாடும் சேவையில் கலந்து கொண்ட ஆயிரத்து 523 பேர் பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பித்தனர். வழங்கப்பட்ட சேவைகளில் 2 ஆயிரத்து 547 பேர் பயன் பெற்றனர் எனப் பிரதேச செயலளர் திருமதி ஜெ.பரமோதயன் தெரிவித்தார்.

பிறப்பு இறப்பு விவாகச் சான்றிதழ்களுக்கு 359 பேரும், புதிய திருத்தம் தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கு 205 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இலவச புகைப்பட சேவை வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதியோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 128 பேருக்கும் இலவச புகைப்படமும் எடுக்கப்பட்டன.

சமுர்த்தி திட்டத்தின் கீழ் கடன் திட்டம் மற்றும் லொத்தர் வீடு உள்ளிட்ட சேவைகளுக்கு 46 பேரும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் 596 பேருக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. சக்கர நாற்காலி, முதியோர் கொடுப்பனவு, மாற்றுவலுவுள்ளோர் போன்றோருக்கு உதவிகளும் வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

Posted in: செய்திகள்